தேனி மாவட்டத்தில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது: மேலும் 4 உயிர்களை குடித்த கொரோனா - ஒரே நாளில் 188 பேருக்கு தொற்று
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று ஒரே நாளில் 4 டாக்டர்கள் உள்பட 188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் 2 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில், 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருந்தனர். இந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பத்தை சேர்ந்த 34 வயது தொழிலாளி நேற்று முன்தினம் இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், அங்கு சிகிச்சை பெற்று வந்த உத்தமபாளையம் பள்ளிக்கார தெருவை சேர்ந்த 75 வயது முதியவர், சின்னமனூர் தேவர் நகரை சேர்ந்த 55 வயது தொழிலாளி, கம்பம் அருகே சாமண்டிபுரத்தை சேர்ந்த 31 வயது தொழிலாளி ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு 60 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 டாக்டர்கள், போடி அரசு மருத்துவமனையில் செவிலியர், ஓடைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் உள்பட நேற்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்பில் இது தான் உச்சம். இதற்கு முன்பு கடந்த 17-ந்தேதி 187 பேர் பாதிக்கப்பட்டதே அதிகபட்ச பாதிப்பாக இருந்தது.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 52 பேர் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளை சேர்ந்தவர்கள். தேனி ஒன்றியத்தில் 34 பேரும், பெரியகுளத்தில் 38 பேரும், உத்தமபாளையத்தில் 22 பேரும், சின்னமனூரில் 16 பேரும், கம்பத்தில் 12 பேரும், ஆண்டிப்பட்டியில் 13 பேரும், கடமலை-மயிலையில் ஒருவரும் நேற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 51 ஆக அதிகரித்து உள்ளது.
மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், கடந்த 16-ந்தேதியில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 1-ந்தேதி நிலவரப்படி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 760 ஆக இருந்தது. 21 நாட்களில் 2 ஆயிரத்து 291 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சில இடங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தொய்வு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியிடங்களுக்கு சகஜமாக சென்று வருவதாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Related Tags :
Next Story