தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு எதிர்ப்பு: சாலையின் குறுக்கே கயிற்றை கட்டி பொதுமக்கள் போராட்டம்
தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே கயிற்றை கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைகள், 3 தனியார் மருத்துவமனைகள், அரசு பெண்கள் கலைக்கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள சிறப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், மேலும் 5 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விரைவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதற்காக படுக்கைகள் உள்ளிட்ட உபகரணங்கள் நேற்று மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. அதை அறிந்த அந்த பகுதி மக்கள், அங்கு திரண்டனர். மேலும் வீடுகள் நிறைந்த பகுதியாக இருப்பதால், அந்த தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக சாலையின் குறுக்காக கயிற்றை கட்டி அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் போலீசாரின் பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சமரசம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story