கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஓச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியில் ராணிப்பேட்டை கலெக்டர் ஆய்வு


கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஓச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியில் ராணிப்பேட்டை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2020 8:22 AM GMT (Updated: 23 July 2020 8:22 AM GMT)

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையம் அமைக்க, ஓச்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.

காவேரிப்பாக்கம், 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்துக்குள் இ-பாஸ் பெற்று பிற மாநிலங்கள், மாவட்டங்கள், மண்டலங்களில் இருந்து வருவோருக்கு சோதனைச் சாவடியில் கட்டாய கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.

அதில் தொற்று இல்லையென்றால் அவர்கள் தங்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மாற்றுப் பாதையில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் வருவோர் தாமாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தும் மையங்களில்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனை மற்றும் தொற்று பரிசோதனை மையம் அமைத்து, அதில் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் தொற்று இருப்பது தெரிய வந்தால், அவர்களை அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனிமைப்படுத்தும் மையங்களுக்கோ அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதன்படி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, வாலாஜா அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆகியவற்றில் தனிமைப்படுத்தும் மையங்களில் கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையம் அமைக்க ஓச்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு, கொரோனா தொற்று நோயாளிகளுக்கு படுகை வசதி, கழிவறை வசதி, பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பேபி இந்திரா, நெமிலி தாசில்தார் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர் வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனிச்சம், பானாவரம் வட்டார மருத்துவர் டேவிஸ், வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமு, சவுந்தரராஜன், ஸ்வேதா மற்றும் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் பலர் உடனிருந்தனர்.

அரக்கோணம்

அரக்கோணம் நகரத்தில் வேதாசலம் தெரு, டி.என்.நகர், சில்வர்பேட்டை செக்போஸ்ட் பகுதிகளில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புள்ள இடங்களில் தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் அரக்கோணம் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுத்தார்.

ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாவட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், தாசில்தார் ஜெயக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் முகமது இலியாஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story