கோவில்பட்டியில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், விவசாயி இறந்ததாக புகார் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கோவில்பட்டியில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், விவசாயி இறந்ததாக புகார் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2020 10:15 PM GMT (Updated: 23 July 2020 6:22 PM GMT)

கோவில்பட்டியில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விவசாயி உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா நாருகாபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 65). விவசாயி. இவருக்கு நேற்று காலை 11.45 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் செல்லத்துரையை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மதியம் 2 மணி அளவில் செல்லத்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வர தாமதமானதால்தான் செல்லத்துரை இறந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், முன்னாள் நகர செயலாளர் ராமசுப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடனே கோவில்பட்டி கிழக்கு போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி, நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுதொடர்பாக மருத்துவ துறை இணை இயக்குனர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள், செல்லத்துரையின் உடலை பெற்று சென்று, இறுதிச்சடங்கு நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story