மும்பை, புனேயை சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அடுத்த மாத இறுதிக்குள் செலுத்தப்படும் என தகவல்


மும்பை, புனேயை சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அடுத்த மாத இறுதிக்குள் செலுத்தப்படும் என தகவல்
x
தினத்தந்தி 23 July 2020 11:19 PM GMT (Updated: 23 July 2020 11:19 PM GMT)

3-வது கட்ட சோதனைக்காக அடுத்த மாத இறுதிக்குள் மும்பை, புனேயை சோ்ந்த 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

மும்பை,

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் உலகையே புரட்டி போட்டு உள்ளது. இந்தியாவில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் அந்த நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் உருவாக்கி உள்ள மருந்து அதிக நம்பகத்தன்மை அளிப்பதாக கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்தியாவில் வருகிற டிசம்பருக்குள் தடுப்பூசி தயாராகி விடும் என்றும், அதன் விலை தலா ரூ.1000 ஆக இருக்கும் என்றும் சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனவாலா நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியா்களுக்கு செலுத்தி அதன் செயல்திறனை கண்டறிய வேண்டியது உள்ளது. இதற்காக அடுத்த மாத (ஆகஸ்ட்) இறுதிக்குள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள புனே மற்றும் மும்பையில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி போடப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவன தலைமை நிர்வாகி ஆதர் பூனவாலா கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள புனே மற்றும் மும்பையில் சோதனை மேற்கொள்ளும் பகுதிகளை ேதர்வு செய்து உள்ளோம். இது தடுப்பு மருந்தின் செயல்திறனை அறிந்து கொள்ள உதவும். உரிய ஒப்புதல்களை பெற்று முக்கியமான 3-வது கட்ட சோதனையை ஆகஸ்டில் இந்தியாவில் மேற்கொள்ள உள்ளோம். இந்திய ஒழுங்குமுறை ஆணையம் விரைவாக ஒப்புதல் கிடைக்க பாதுகாப்பு மற்றும் செயல்திறனை கருத்தில் கொண்டு வழிகாட்டுதல்களுடன் உதவி செய்து வருகின்றனர். நாங்கள் அவசரம் காட்ட விரும்பவில்லை. தகுதியான, பயனுள்ள மருந்துகளை அதிகளவில் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்மூலம் எங்கள் நிறுவனம், 100 கோடி டோஸ்களை இந்தியாவுக்காகவும், 70 குறைந்த மற்றும் மத்திய வருமான நாடுகளுக்காகவும் தயாரிக்க முடியும்.

தடுப்பூசிகளை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சவால்களும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தினமும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளுடன் தயாரிப்பைத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story