வில்லியனூரில் பரபரப்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்


வில்லியனூரில் பரபரப்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2020 5:27 AM IST (Updated: 24 July 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டது. இதை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியனூர்,

கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ பதிவிடப்பட்டது. இந்தநிலையில் கோவையில் பெரியார் சிலை மீது காவி நிற சாயம் ஊற்றப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களின் சூடு அடங்குவதற்குள் புதுவையில் நேற்று எம்.ஜி.ஆர். சிலை மீது காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

வில்லியனூரில் புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையின் நடுவே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலையின் மீது காவி துண்டு அணிவிக்கப்பட்டதாக நேற்று மதியம் தகவல் பரவியது. இதை அறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிலையின் கழுத்தில் காவி வேட்டியை துண்டு போல் அணிவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதை கண்டித்து சிலையின் முன் நடுரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காவி துண்டு அணிவித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதை எல்லாம் சிலை அருகே உள்ள ராமபரதேசி கோவிலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், போராட்டம் நடந்த பகுதிக்கு வந்தார். அந்த பெண், ‘எம்.ஜி.ஆர். சிலைக்கு நான் தான் காவி வேட்டியை துண்டாக அணிவித்தேன், எனது கணவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். சிலையின் கழுத்தில் மாலை ஏதும் இல்லாததால், அழகுபடுத்துவதற்காக எனது கணவரின் காவி வேட்டியை அணிவித்தேன்’ என்று கூறினார். அவரிடம் போலீசாரும், எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் வேட்டியை துண்டாக எம்.ஜி.ஆர். சிலைக்கு அணிவித்தது நான் தான் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த காவி துண்டு அகற்றப்பட்டது. பின்னர் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிலைக்கு காவி துண்டு அணிவித்ததாக கூறிய பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story