கொரோனா தொற்றை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் காமராஜ் பேட்டி


கொரோனா தொற்றை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 24 July 2020 3:30 AM IST (Updated: 24 July 2020 6:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அப்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய அறிவுரை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் ஆரம்பத்தில் கொரோனா தொற்றானது குறைவாக இருந்தது. இந்தநிலையில் வெளி மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இதுவரை 1,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 779 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 280 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரிசோதனை ஒரு நாளைக்கு 300, 400 பேர் என இருந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 1,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வரை 23,603 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று என வந்தவுடன் உடனடியாக அவரிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை 73.55 சதவீதம் ஆகும். அரசின் பல்வேறு நடவடிக்கையால் வெகுவிரைவில் கொரோனா தொற்றை வெல்வோம். இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூலை மாதத்திற்குரிய விலையில்லா பொருட்கள் இதுவரை 82 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு எதையும் செய்யவில்லை என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, மக்களுக்கு எதையும் செய்யாமல் இருந்தால் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. நலத்திட்டங்கள் செய்ததால் தான் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அதனை மக்கள் மறந்திருப்பார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார். அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். கந்தசஷ்டி விவகாரத்தில் போதிய நடவடிக்கை அரசு எடுக்கவில்லை என பா.ஜனதா கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் கைது, பதிவுகள் நீக்கம் போன்ற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடர் வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் ரேஷன் கடை ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் இந்த நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு எடுக்க மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர்கள் ஜெயபிரீத்தா (திருவாரூர்), புண்ணியகோட்டி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story