சின்னமனூர் அருகே, வாலிபருக்கு கத்திக்குத்து - உறவினர்கள் சாலை மறியல்-முற்றுகை


சின்னமனூர் அருகே, வாலிபருக்கு கத்திக்குத்து - உறவினர்கள் சாலை மறியல்-முற்றுகை
x
தினத்தந்தி 24 July 2020 11:00 AM IST (Updated: 24 July 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 21). இவர், தனது நண்பர்களுடன் பட்டாளம்மன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர், அஜித்குமாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்குமாரை குத்திவிட்டு தப்பியோடி விட்டார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அஜித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஜித்குமாரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அஜித்குமாரை தாக்கிய ரமேஷ் எரசக்கநாயக்கனூர் ஊராட்சி தலைவியின் உறவினர் என கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்பதற்காக அஜித்குமாரின் உறவினர்கள், ஊராட்சி மன்ற தலைவியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமாரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அஜித்குமாரை தாக்கிய ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story