கோவை கல்கி கார்டனில் ரூ.65 லட்சத்தில் உள் விளையாட்டு அரங்கம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்


கோவை கல்கி கார்டனில் ரூ.65 லட்சத்தில் உள் விளையாட்டு அரங்கம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 July 2020 6:00 AM GMT (Updated: 24 July 2020 5:45 AM GMT)

கோவை கல்கி கார்டனில் ரூ.65 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை மாநகராட்சி 91-வது வார்டு கல்கி கார்டனில் ரூ.64.90 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடந்தது. இதில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக பரப்பளவிலும், மக்கள்தொகை பெருக்கத்திலும் மிகப்பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி விளங்கி வருகிறது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஏராளமான திட்டங்களை முதல்-அமைச்சரின் தனிகவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் முதலடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ்நிலையம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கோவை மாநகராட்சி 91-வது வார்டு தொட்டராயன் கோவில் வீதி திட்ட சாலையில், மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.63.90 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட கோபுர விளக்குகளுடன் கூடிய தெருவிளக்குகள், சி.பி.எம். கல்லூரி அருகில் உயர்மட்ட கோபுர விளக்குகளுடன் கூடிய தெருவிளக்குகளை பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து தொட்டராயன் கோவில் வீதியில் குறுக்கு சாலைகளில் ரூ.6.90 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, உதவி ஆணையர்(தெற்கு) ரவி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story