கோவில்பட்டியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


கோவில்பட்டியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 24 July 2020 10:45 PM GMT (Updated: 24 July 2020 8:00 PM GMT)

கோவில்பட்டியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பங்கேற்று பேசினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம், கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் முன்னிலை வகித்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன், அய்யப்பன், சுகாதேவி, முத்துலட்சுமி, முத்து, ராணி, பத்மாவதி, தொழில் வர்த்தக சங்க தலைவர் பழனிசெல்வம், செயலாளர் பாபு, பொருளாளர் சுரேஷ்குமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர், மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, காவல்துறை அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளது. போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தில் குற்றத்தடுப்பு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

காவல்துறை என்பது மக்கள் பணியாகும். காவல்துறையில் ஒரு சிலர் செய்யும் தவறுகளை வைத்து, அனைவரும் தவறு செய்கிறார்கள் என்று கூற முடியாது. உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலும் அனைவரும் ஊக்கத்துடன் பணியாற்றுகின்றனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தூத்துக்குடி 3-வது மைல் ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் வகையில் மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கும் முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அதே போன்று கையுறை அணியவேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அவ்வப்போது கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போன்றவற்றால் சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் அங்கு உள்ள போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகர் நல அலுவலர் அருண்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டாலின், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செல்வகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story