மயிலாடுதுறையில், பயங்கரம் தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை- 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை


மயிலாடுதுறையில், பயங்கரம் தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை-  2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 July 2020 11:00 PM GMT (Updated: 24 July 2020 10:56 PM GMT)

மயிலாடுதுறையில், தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குத்தாலம்,

மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு(வயது 44). இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் நீலகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன.

இதனால் இவரது பெயர், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்று உள்ளது. பாபு, தி.மு.க. நகர செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.15 மணி அளவில் பாபு தனது வீட்டின் அருகில் உள்ள துர்க்கையம்மன் கோவில் குளத்திற்கு வாய்க்காலில் இருந்து தண்ணீர் செல்வதை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், திடீரென பாபுவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, கழுத்து, கை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக பாபு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. பிரமுகர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று பாபுவின் கூட்டாளிகளான அரியலூர் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தை சேர்ந்த மனோகரன்(33), மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த சேந்தங்குடி மாதவன்(26), திருவழுந்தூர் பாரதிராஜா(28), மாப்படுகை வெங்கடேஷ்(21) ஆகிய 4 பேரும் அரியலூர் மாவட்டம் செந்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்கள் 4 பேரையும் 7 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து செந்துறை போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

Next Story