தியாகதுருகம் அருகே சிகிச்சை முகாமில் இருந்த கொரோனா நோயாளிகள் திடீர் சாலை மறியல் - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


தியாகதுருகம் அருகே சிகிச்சை முகாமில் இருந்த கொரோனா நோயாளிகள் திடீர் சாலை மறியல் - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 25 July 2020 4:00 AM IST (Updated: 25 July 2020 8:54 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே சிகிச்சை முகாமில் இருந்த கொரோனா நோயாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

கண்டாச்சிமங்கலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள தனியார் பள்ளி கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு சிகிச்சைக்காக வந்து 10 நாட்கள் ஆன கொரோனா நோயாளிகளை அழைத்து அவர்களில் காய்ச்சல், சளி தொல்லை இல்லாதவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த மையத்தில் 10 நாட்களுக்கும் குறைவாக தங்கியிருந்த 100-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மையத்தில் இருந்து வெளியே வந்து அங்குள்ள சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளிகள் சாலை மறியல் செய்வதை பார்த்த அங்கிருந்த மக்கள் தங்களுக்கு கொரோனா தொற்று பரவிவிடுமோ? என்கிற அச்சத்தில் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி தாசில்தார் (பொறுப்பு )பிரபாகரன், தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொரோனா நோயாளிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தும் மையத்தில் இடநெருக்கடி உள்ளது.

மேலும் கொரோனா பரிசோதனை செய்த நாளில் இருந்து கணக்கிட்டால் தற்போது எங்களுக்கும் 10 நாட்கள் ஆகிவிட்டது. எனவே எங்களையும் வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என கூறினர். இதை கேட்ட அதிகாரிகள், இது குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தும் மையத்திற்கு திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story