நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 25 July 2020 11:00 AM IST (Updated: 25 July 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கூடலூர், 

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் ஏற்பட்டது. இந்த தொடர் மழை காரணமாக கடந்த 5 நாட்களில் மட்டும் 1 அடி வரை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த 19-ந் தேதி அணையின் நீர்மட்டம் 113.40 அடியாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114.40 அடியாக காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 513 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 125 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 1,627 மில்லியன் கன அடியாக இருந்தது. அதேபோல் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 31.28 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பெரியாறு-2.2, தேக்கடி-10.08, உத்தமபாளையம்-1, வீரபாண்டி-29, வைகை அணை-6, மஞ்சளாறு-34, சோத்துப்பாறை அணை-20.

Next Story