கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது - புதிதாக 628 பேருக்கு தொற்று உறுதி


கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது - புதிதாக 628 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 25 July 2020 10:30 PM GMT (Updated: 25 July 2020 8:16 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 628 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்த மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் ஆறுமுகநேரி, திருச்செந்தூர், மணப்பாடு, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, புறையூர், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, கோவில்பட்டி, கழுகுமலை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சண்முகபுரம், சாரங்கபாணி தெரு, துறைமுக ஊழியர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 291 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 897 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 28 பேர் இறந்து உள்ளனர். 2 ஆயிரத்து 366 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட தெற்கு காரங்காட்டை சேர்ந்த 88 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் பரவலாக 210 பேருக்கும், வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 2 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக நெல்லை மாநகராட்சி பகுதியில் 46 பேருக்கும், அம்பை பகுதியில் 42 பேருக்கும், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 27 பேர், சேரன்மாதேவியில் 16 பேர், பாப்பாக்குடி, நாங்குநேரி வட்டாரத்தில் தலா 13 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. டவுன் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரரின் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,595 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நெல்லை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து 142 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை மொத்தம் 2,116 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டனர். 1,400-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே சிறுநீரக பிரச்சினையும் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். அவரது உடல் பாளையங்கோட்டை பள்ளிவாசல் வளாகத்தில் பாதுகாப்பு நடைமுறைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,607 ஆக உயர்ந்துள்ளது. இதில் 837 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். 750-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 628 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 493 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story