வேலூர், அணைக்கட்டில் 3 போலி டாக்டர்கள் கைது ஆற்காட்டில் மருத்துவமனைக்கு ‘சீல்’


வேலூர், அணைக்கட்டில் 3 போலி டாக்டர்கள் கைது ஆற்காட்டில் மருத்துவமனைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 25 July 2020 10:45 PM GMT (Updated: 25 July 2020 8:45 PM GMT)

வேலூர், அணைக்கட்டில் 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காட்டில் மருத்துவமனைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

வேலூர்,

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிலர் கிளினிக் நடத்தி வருவதாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சண்முகசுந்தரம் மருத்துவத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் கிஷோர்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வேலூர் நகரில் பல இடங்களில் திடீரென சோதனை நடத்தினர்.

கொணவட்டத்தில் நடத்திய சோதனையில், அதே பகுதியை சேர்ந்த குல்னாஸ் ரூஹி (வயது 30) என்ற பெண், யுனானி மருத்துவம் படித்து விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் அவரை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரின் கிளனிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகளை மருத்துவக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.

வேலூரை அடுத்த ஊசூர் பகுதிகளில் உள்ள கிளினிக்கில் வேலூர் தலைமை மருத்துவ அலுவலர் செந்தாமரைக்கண்ணன் தலைமையிலான மருத்துக்குழுவினர் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.

அப்போது முருக்கேரி கிராமத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் நடத்திய சோதனையில், அதே பகுதியை சேர்ந்த நளினி (38) என்பவர் பிசியோதெரபிஸ்ட் படித்து விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவர் மீது அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நளினியை கைது செய்தனர். அதையடுத்து வருவாய்த்துறையினர் அந்த கிளினிக்கை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அணைக்கட்டு அருகே டி.சி.குப்பம் கிராமத்தில் போலி டாக்டர் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட சுகாதார இணை இயக்குனர் யாஸ்மினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் அணைக்கட்டு அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் நேற்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மந்தைவெளி பகுதியில் ஒரு வீட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் நரசிம்மன் (38) என்பதும், ரத்த பரிசோதனை படிப்பு படித்து விட்டு அவரது வீட்டின் உள்ளே பொது மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமை மருத்துவர் பிரசாந்த் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன்ஆகியோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிம்மனை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த காவனூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 68). இவர், மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ஆற்காடு தாசில்தார் காமாட்சிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் காமாட்சி, ஆற்காடு துணை மருத்துவ அலுவலர் சிவசங்கரி மற்றும் அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த போலி டாக்டர் காந்தி மற்றும் டாக்டர் படிப்பு முடித்த ஒருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனையடுத்து அதிகாரிகள் மருத்துவமனையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கு இருந்த காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Next Story