16 ஏரிகளை வெட்டிய சமூக ஆர்வலர்: கொரோனா பாதித்த கல்மனே காமேகவுடா உடல் நிலை கவலைக்கிடம் - தரமான சிகிச்சை அளிக்க குமாரசாமி வலியுறுத்தல்


16 ஏரிகளை வெட்டிய சமூக ஆர்வலர்: கொரோனா பாதித்த கல்மனே காமேகவுடா உடல் நிலை கவலைக்கிடம் - தரமான சிகிச்சை அளிக்க குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 July 2020 11:30 PM GMT (Updated: 25 July 2020 11:30 PM GMT)

16 ஏரிகளை வெட்டிய சமூக ஆர்வலரான கல்மனே காமேகவுடா உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது. இதனால் அவருக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசை குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

மண்டியா,

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கல்மனே காமேகவுடா. ஆடுகள் மேய்க்கும் தொழிலை செய்து வரும் இவர் 40 ஆண்டுகளில் 16 ஏரிகளை உருவாக்கியுள்ளார். மேலும் மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்து வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி கர்நாடக அரசு ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவித்து உள்ளது. இவரை பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.

இந்த நிலையில் 85 வயது நிரம்பிய கல்மனே காமேகவுடா கால் வலியால் அவதிப்பட்டார். இதனால் மலவள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக மண்டியாவில் உள்ள மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது மகன்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அவர் பராமரிப்பாளர் இல்லாமல் தனிமையில் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவும், இயற்கை உபாதையை கழிக்க செல்ல முடியாத காரணத்தாலும் அவர் மதிய உணவு சாப்பிடாமல் பட்டினி கிடந்து வருவதாகவும், அவரது உடல் நிலை மோசமாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதித்து சிகிச்சை பெறும் கல்மனே காமேகவுடாவின் உடல் நிலை மோசமாக உள்ளது. நாட்டுக்காக சேவையாற்றிய அவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அவருக்கு தரமான சிகிச்சை கிடைக்க கர்நாடக அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு கர்நாடக மருத்துவக் கல்வித் துறை மந்திரி கே.சுதாகர் பதிலளித்து வெளியிட்டுள்ள பதிவில், கல்மனே காமேகவுடாவுக்கு மண்டியா மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தரமான சிகிச்சை அளிக்க மிம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனரை தொடர்பு கொண்டு உத்தரவிட்டுள்ளேன். மேலும் அடிக்கடி நான் காமேகவுடாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறேன். அவர் விரைவில் குணமடைய இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story