பள்ளி மாணவர்களுக்கு கல்வி யூடியூப் சேனல் மாநில அரசு தொடங்கியது


பள்ளி மாணவர்களுக்கு கல்வி யூடியூப் சேனல் மாநில அரசு தொடங்கியது
x
தினத்தந்தி 26 July 2020 12:09 AM GMT (Updated: 26 July 2020 12:09 AM GMT)

மராட்டியத்தில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி யூடியூப் சேனல்களை மாநில அரசு தொடங்கி உள்ளது.

மும்பை,

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அந்த வைரஸ் பரவல் காரணமாக 2020-21 கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்குவதற்கு பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த மாநில அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தையும் நிர்ணயித்து உள்ளது.

இந்த நிலையில், மராத்தி மற்றும் உருது மீடியத்தில் படிக்கும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன் பெறும் வகையில் மராட்டிய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எம்.எஸ்.சி.இ.ஆர்.டி.) 4 கல்வி யூடியூப் சேனல்களை (SCERT-MH) தொடங்கியுள்ளது.

இதன்படி மராத்தி மற்றும் உருது மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை இரண்டு சேனல்களும், 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 யூடியூப் சேனல்களும் தொடங்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் துணை இயக்குனர் விகாஸ் காரட் கூறுகையில், அடுத்த சில நாட்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மீடியம் மாணவர்களுக்கான யூடியூப் சேனல் தொடங்கப்படும். 12-ம் வகுப்பு அறிவியல் மற்றும் கலை பிரிவு மாணவர்களுக்காக தனியாக யூடியூப் சேனல் தொடங்கப்படும். இந்த அனைத்து சேனல்களில் உள்ள கல்வி வீடியோக்களில் எந்த விளம்பரங்களும் இடம் பெறாது. இந்த சேனல்கள் அனைத்தும் இலவசம் என்றார்.

Next Story