இன்று முழுஊரடங்கு அமல்: பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் அலைமோதிய மக்கள்


இன்று முழுஊரடங்கு அமல்: பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் அலைமோதிய மக்கள்
x
தினத்தந்தி 26 July 2020 4:00 AM IST (Updated: 26 July 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

இன்று முழுஊரடங்கு அமலாவதையொட்டி பொருட்கள் வாங்குவதற்கு திண்டுக்கல் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 4-வது வாரமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் முழு ஊரடங்கு நிறைவடைகிறது.

இதையொட்டி நேற்று திண்டுக்கல்லில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் அலைமோதினர். நகரில் மொத்த மற்றும் சில்லரை பலசரக்கு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அரிசி, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை தேவையான அளவு மக்கள் வாங்கி சென்றனர். அதேபோல் சிறு வியாபாரிகள், மொத்த விற்பனை கடைகளில் குவிந்தனர்.

மேலும் திண்டுக்கல் நகரில் செயல்படும் தற்காலிக மொத்த மற்றும் சில்லரை காய்கறி சந்தைகளில் காலை 6 மணிக்கே மக்கள் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமையில் மொத்தமாக காய்கறிகளை வாங்கி பழகிய மக்கள், நேற்று மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் காலை 9 மணிக்கு காய்கறி சந்தைகளில் கூட்டம் அலைமோதியது.

அதேபோல் திண்டுக்கல் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளிலும் மக்கள் அதிக அளவில் கூடினர். 2 நாட்களுக்கு தேவையான அளவு மீன், இறைச்சியை வாங்கினர். இதற்காக திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் நேற்று திடீரென மீன் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அனைத்து மீன் கடைகளிலும் மதியம் வரை கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது. இதுதவிர டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை களைகட்டியது. மதுபான பிரியர்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்பட தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் மக்கள் வெளியே வந்ததால், முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. திண்டுக்கல் மெயின்ரோடு, 4 ரதவீதிகள், கடைவீதி, பழனி சாலை உள்ளிட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவானது. போக்குவரத்து போலீசார் விரைவாக வந்து வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Next Story