‘நான் அவன் இல்லை’ சினிமா பட பாணியில் இளம்பெண்களை குறி வைத்து நகை, பணம் மோசடி என்ஜினீயரிங் பட்டதாரி கைது


‘நான் அவன் இல்லை’ சினிமா பட பாணியில் இளம்பெண்களை குறி வைத்து நகை, பணம் மோசடி என்ஜினீயரிங் பட்டதாரி கைது
x
தினத்தந்தி 26 July 2020 6:53 AM IST (Updated: 26 July 2020 6:53 AM IST)
t-max-icont-min-icon

‘நான் அவன் இல்லை’ சினிமா பட பாணியில் இளம்பெண்களை குறி வைத்து நகை, பணம் மோசடி செய்த என்ஜினீயரிங் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் ராகேஷ் சர்மா(வயது 36). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், திருமண தகவல் மையம் மூலம் அறிமுகம் ஆனார். அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அவர், அந்த பெண்ணிடம் இருந்து ரூ.5½ லட்சம் மற்றும் 20 பவுன் நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த இளம்பெண், தனது தந்தையிடம் கூறினார். இது குறித்து அவர், கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் ராகேஷ் சர்மா, மீண்டும் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.2 ஆயிரம் தரும்படி கேட்டார். போலீசார் அறிவுறுத்தல்படி, மாதவரம் ரவுண்டானா அருகே வந்து பணத்தை வாங்கி கொள்ளும்படி அந்த பெண் கூறினார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு அங்கு அந்த பெண்ணுடன் சென்ற போலீசார், மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது இளம்பெண்ணிடம் பணம் வாங்க வந்த ராகேஷ் சர்மாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கள் வெளியாகின.

ராகேஷ் சர்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கத்தார் நாட்டில் வேலை பார்த்து உள்ளார். அங்கு இருக்கும்போதே, “நான் அவன் இல்லை” என்ற தமிழ்படத்தை 30 முறை பார்த்து உள்ளார். பின்னர் அதே சினிமா பட பாணியில் சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தைகள் கூறி வலை வீசி உள்ளார். அதில் சிக்கிய பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை பறித்துள்ளார்.

இது போல் சிங்கப்பூர், மலேசியா, திருச்சி மற்றும் சென்னையில் வளசரவாக்கம், கோடம்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை வாங்கி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. கைதான மோசடி மன்னன் ராகேஷ்சர்மாவிடம், இதுபோல் எத்தனை பெண்கள் ஏமாந்து உள்ளனர்? என போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story