கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகத்துக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பொதுமக்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்


கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகத்துக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பொதுமக்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 July 2020 11:00 PM GMT (Updated: 26 July 2020 4:29 AM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சந்திர சேகர் சாகமூரி முன்னிலை வகித்தார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாவட்டத்தில் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, கொரோனா தொற்று பரவாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராம கண்காணிப்புக்குழு மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அவசர தேவைகள் மற்றும் உதவிகளுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மருத்துவ கட்டுப்பாட்டு அறை எண்.1077-க்கு தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

மேலும் மாவட்டத்தில் இதுவரை 41,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2247 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் கடலூர் செம்மண்டலத்தில் பவ்டா சுயஉதவிக்குழு சார்பில் நடந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கணவரை இழந்த பெண்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story