நாகையில், சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் காயம் - பொதுமக்கள் சாலை மறியல்


நாகையில், சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் காயம் - பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 July 2020 5:15 AM GMT (Updated: 26 July 2020 5:09 AM GMT)

நாகையில், சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சாராயம், மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் துறையினர், கடத்தல்காரர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தும் காவல் துறையின் முறையான ஒத்துழைப்பு இல்லாததால், காரைக்கால் சாராயம் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சாராய பாட்டில்களை கடத்தி வந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து வடகுடி சாலை வழியாக நாகை நகருக்குள் மின்னல் வேகத்தில் வந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த அசாருதீன்(வயது 26) என்பவர் மீது சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அசாருதீனுக்கு கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து சாராய பாட்டில்கள் கீழே விழுந்து சிதறியது. இதை பார்த்த அந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சாராய பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

இதில் ஆத்திரம் அடைந்த அசாருதீனின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி நாகை-நாகூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வடகுடி சாலையில் தொடர்ந்து மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி செல்கின்றனர். அவர்களது மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் செல்வதால், சாலையில் நடக்கவே அச்சமாக உள்ளது. எனவே சாராய கடத்தலை தடுக்க வேண்டும். சாராயம் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாராயம் கடத்தி வந்த மர்ம நபர்களின் மோட்டார் சைக்கிள் வாலிபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story