சட்டசபை காவலர்கள் 2 பேருக்கு கொரோனா


சட்டசபை காவலர்கள் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 July 2020 3:24 AM IST (Updated: 27 July 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபை காவலர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சட்டசபை வளாகத்தை 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வந்த நிலையில் இதில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபை மைய மண்டபம் மூடப்பட்டு சபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து திறந்தவெளியில் மரத்தின் அடியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்தநிலையில் சட்டசபை காவலர்கள் 2 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் முதல் சட்டசபை வளாகம் மூடப்பட்டது. மீண்டும் நாளை மறுநாள் (புதன் கிழமை) சட்டசபை திறக்கப்படும் என சட்டசபை செயலர் முனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனால் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சபைக் காவலர்களுடன் பணியாற்றி வந்த மற்ற அரசு ஊழியர்கள், அலுவலர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்

புதுவை சுப்பையா சாலையில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றி வந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்கு நேற்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி தீயணைப்பு நிலையம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டது. தீயணைப்பு நிலையம் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். இதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு வரும் அழைப்புகள் அனைத்தும் கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் வழக்கம்போல் மீண்டும் தீயணைப்பு நிலையம் செயல்பட தொடங்கும் என தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story