நெல்லை அருகே லாரி டிரைவர் கொலை: என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது


நெல்லை அருகே லாரி டிரைவர் கொலை: என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2020 5:30 AM IST (Updated: 27 July 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே லாரி டிரைவர் கொலையில் என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள தாழையூத்தை அடுத்த தாதனூத்து கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் மகன் கல்லத்தியான் (வயது 32). லாரி டிரைவரான இவர் ஒரு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் பிற்பகலில் கல்லத்தியான், தம்பி ஆறுமுகம் (30) ஆகிய இருவரும் ஊர் அருகில் காட்டுப்பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் இவர்களை வழிமறித்தது. பின்னர் கல்லத்தியானை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அவரை வெட்ட விடாமல் தடுக்க முயன்ற ஆறுமுகத்துக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தாதனூத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சாமிநாதன் (56) என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக கல்லத்தியான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சாமிநாதனின் மகன் ரகுநாத் (30), இவருடைய சித்தப்பா மகன்கள் அஜய் (23) மற்றும் மூர்த்தி (35) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட ரகுநாத் உள்ளிட்டோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர். அதில், 2015-ம் ஆண்டு அம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவத்தில் கல்லத்தியான் மீது சந்தேகம் இருப்பதாக என்னுடைய தந்தை சாமிநாதன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது கல்லத்தியான் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த கல்லத்தியான் மற்றும் அவருடைய உறவினர்கள் மாடசாமி, கொம்பையா, மணி ஆகிய 4 பேரும் சேர்ந்து சாமிநாதனை வெட்டிக் கொலை செய்தனர். இதில் கைதான கல்லத்தியான் உள்பட 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்து சுற்றித்திரிந்தனர். எனவே சாமிநாதன் கொலைக்கு பழிக்குப்பழியாக கல்லத்தியானை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். காட்டுப்பகுதியில் நடந்து வருவதை உறுதி செய்து கொண்டு அவரை வெட்டிக் கொலை செய்தோம்“ என்று கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் ரகுநாத் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story