வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி சாவு: உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி சாவு: உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2020 5:45 AM IST (Updated: 27 July 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கடையம் வனத்துறையினர் அணைக்கரைமுத்துவை விசாரணைக்காக அழைத்து சென்றபோது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அணைக்கரைமுத்துவை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே வனத்துறையினர் தாக்கியதில்தான் அணைக்கரைமுத்து இறந்ததாக கூறி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அம்பை மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன் நேற்று முன்தினம் கடையம் சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்று, வனத்துறை மற்றும் மின்வாரிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே அணைக்கரைமுத்துவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

தொடர் போராட்டம்

வாகைக்குளத்தில் உள்ள அணைக்கரைமுத்துவின் வீட்டின் முன்பு உறவினர்கள் நேற்று 4-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தென்காசி தாசில்தார் சுப்பையன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் அணைக்கரைமுத்துவின் வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சம்பந்தப்பட்ட வனத்துறையினர் 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்கள் அனைவரையும் சஸ்பெண்டு செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை தங்களுக்கு தர வேண்டும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே அணைக்கரைமுத்துவின் முதல் மனைவியிடம், அவரது உடலை ஒப்படைப்பதற்காக அதிகாரிகள், பக்கத்து தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்டனர். பின்னர் முதல் மனைவியிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.

நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அணைக்கரைமுத்துவின் வீட்டின் முன்பாக நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து அங்கிருந்து பெரும்பாலானவர்கள் வெளியே புறப்பட்டு சென்றனர்.

Next Story