நாகை மாவட்டத்தில், கொரோனாவுக்கு முதியவர் பலி - திருவாரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 93 பேருக்கு தொற்று உறுதி


நாகை மாவட்டத்தில், கொரோனாவுக்கு முதியவர் பலி - திருவாரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 93 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 July 2020 4:00 AM IST (Updated: 27 July 2020 7:08 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவாரூர்,

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் 4 பேர் நாகை மாவட்ட கணக்கிலிருந்து நீக்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கை 529 ஆக மாறியது. நாகை மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சீர்காழி தாலுகா விளந்திடல் சமுத்திரத்தை சேர்ந்த 73 வயது முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13-ந் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரியை ஆய்வு செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் நாகை மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 565 ஆக உயர்ந்துள்ளது. இதில் 314 பேர் குணமடைந்துள்ளனர். 248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 1,256 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்். இதில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் திருவாரூர் பகுதியில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 10 பேருக்கும், காய்கறி கடை உரிமையாளர் ஒருவர் உள்பட 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குடவாசல் பகுதியில் 16 பேரும், முத்துப்பேட்டை பகுதியில் 6 பேரும் மற்றும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 93 பேர் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவரின் எண்ணி்கை 1,349 ஆக உயர்ந்துள்ளது.

Next Story