பாம்பன் கடலில், பாறையில் மோதிய படகு மூழ்கியது; 10 மீனவர்கள் தத்தளிப்பு - ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர்-போலீசார் இணைந்து மீட்டனர்
பாம்பன் அருகே நடுக்கடலில் பாறையில் மோதிய படகு கடலில் மூழ்கியது. இதனால் தத்தளித்த தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ராமேசுவரம்,
தூத்துக்குடி அருகே தருவைக்குளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ், இன்னாசி, ஜெயசீலன், தங்கராஜ், வேலு, ராமு, மாரி, முருகவேல், மாடசாமி உள்ளிட்ட 10 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலையில் ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றில் நாகப்பட்டினம் பகுதியில் மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்களது படகு நள்ளிரவு 2 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்-மண்டபத்துக்கு இடையே நடுக்கடலில் வந்த போது திடீரென படகு கடலில் உள்ள பாறை மீது மோதியது. இதில் படகு உடைந்து கடல் நீர் உள்ளே புகுந்ததால் மூழ்க தொடங்கியது. இதுபற்றி படகில் இருந்த மீனவர்கள் அவசரம் அவசரமாக தூத்துக்குடியில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாம்பனில் இருந்து நாட்டுப்படகு ஒன்றில் மீனவர்களுடன் கடலோர போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் படகு மூழ்கிய இடத்திற்கு விரைந்தனர்.
அதற்குள் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ்.பருந்து இந்திய கடற்படை விமான தளத்தில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று அங்கு விரைந்து சென்றது. கடலில் தத்தளித்து கொண்டிருந்த 10 பேரில் 4 பேரை கயிறுகட்டி கடற்படையினர் மேலே தூக்கி ஹெலிகாப்டரில் ஏற்றி, மண்டபம் முகாம் தளத்தில் இறக்கிவிட்டனர். அங்கு மீனவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. மேலும் கடலில் தத்தளித்த மற்ற 6 மீனவர்களையும் பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் வந்த கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் மீட்டு படகில் ஏற்றி பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதிக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட 10 பேரும் பாம்பனில் உள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இதுபற்றி தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர் இன்னாசி கூறியதாவது:-
பாம்பன்- மண்டபத்துக்கு இடைப்பட்ட கடலில் வந்துகொண்டிருந்தபோது நடுக்கடலில் உள்ள பாறை மீது படகு மோதி, படகு கடலில் மூழ்க தொடங்கியது. உயிருக்கு போராடிய 10 பேரையும் காப்பாற்றிய இந்திய கடற்படை, கடலோர போலீஸ் மற்றும் பாம்பன் மீனவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மூழ்கிய படகின் மதிப்பு ரூ.20 லட்சம். இதில் 6 டன் வலை, ஜி.பி.எஸ்.கருவி இருந்தது. பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. கடலில் மூழ்கி கிடக்கும் படகை மீட்டு கரைக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story