மதுரையில் புதிதாக 209 பேருக்கு கொரோனா - 8 பேர் உயிரிழந்தனர்
மதுரையில் புதிதாக நேற்று 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 8 பேர் உயிரிழந்தனர்.
மதுரை,
மதுரையில் நேற்று 209 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 168 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 13 பேர் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், 4 கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.
நேற்றுடன் சேர்த்து மதுரையில் 9 ஆயிரத்து 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 249 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 7 ஆயிரத்து 643 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
1,952 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்து வந்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மதுரை மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.
மதுரையில் நேற்று 50 வயது ஆண், 75, 73, 64, 80, 65 வயது முதியவர்கள், 47 மற்றும் 55 வயது ஆண் ஆகிய 8 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 210 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story