ராஜாக்கமங்கலம் அருகே பரபரப்பு: தண்ணீர் தொட்டியில் 4 வயது சிறுவன் பிணம் - சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்


ராஜாக்கமங்கலம் அருகே பரபரப்பு: தண்ணீர் தொட்டியில் 4 வயது சிறுவன் பிணம் - சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 27 July 2020 11:00 AM IST (Updated: 27 July 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே 4 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தான். அவனது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகம் பாம்பன்விளை பகுதியை சேர்ந்தவர் அருண் ஜெனிஸ் (வயது 30), கொத்தனார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்து விட்டார். முதல் மனைவி உயிருடன் இருந்த போது ஆல்பிரின் பிரியாஸ் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார். அந்த சிறுவனுக்கு தற்போது 4 வயது ஆகிறது.

இதற்கிடையே அருண் ஜெனிஸ் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ரதிதேவி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த வாரம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அருண் ஜெனிஸ் மனைவியை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். சிறுவன் ஆல்பிரின் பிரியாஸ் தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தான். மதியம் சிறுவன் வீட்டின் முற்றத்தில் ஓடியாடி பந்து விளையாடி கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கடந்து பார்த்த போது விளையாடி கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் தேடினர். அப்போது, வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவனின் பிணம் மர்மமான முறையில் கிடந்தது.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சிறுவனின் உறவினர்கள் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அந்த புகாரில் சிறுவனின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்ணீர் தொட்டியில் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது பந்து திறந்திருந்த தொட்டியில் விழுந்ததால், அதை எடுக்க முயன்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. எனினும் சாவில் மர்மம் ஏதேனும் இருக்கிறதா? என்றும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

Next Story