விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முழு ஊரடங்கால் வெறிச்சோடிய நகரங்கள் - மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர்.
கள்ளக்குறிச்சி,
கொரோனா என்கிற மூன்றெழுத்து வைரஸ் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 6-ம் கட்டமாக 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரைக்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் ஏதும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்தில் வந்த 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. விழுப்புரத்தை பொறுத்தவரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பிரதான சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து இருந்தனர். மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருந்தனர்.
இருப்பினும் சிலர் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்து வந்தனர். இவர்களை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வகையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றித்திரிந்த 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பாதுகாப்பு நடவடிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
விக்கிரவாண்டியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலையில் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இருப்பினும் மக்களில் சிலர் தங்களுக்குள் சுய கட்டுப்பாடு இல்லாமல் அலட்சியமாக வெளியில் நடமாடியதை காணமுடிந்தது.
இதேபோல் செஞ்சி, அனந்தபுரம், ஆலம்பூண்டி, நாட்டார்மங்கலம், திண்டிவனம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் முழு ஊரடங்கை பயன்படுத்தி செஞ்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் மேற்பார்வையில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கடைவீதி, கூட்டு ரோடு, திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினியை தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் நேற்று மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆனால் மருந்து கடைகள், பால் பூத்துகள் மட்டும் திறந்து இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் மெயின் ரோடு, துருகம் சாலை, காந்தி ரோடு, கச்சேரிசாலை, நான்கு முனை சந்திப்பு ஆகிய பிரதான சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. மேலும் தேவையில்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றியவர்கள் மீது போலீசர்ா வழக்கு பதிவுசெய்தனர். இதேபோல் சங்கராபுரம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், சின்னசேலம், மூங்கில்துறைப்பட்டு என்று கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story