கொரோனா ‘ஹாட்ஸ்பாட்டாக’ மாறும் விழுப்புரம் புது உச்சமாக ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று உறுதி - பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் புது உச்சமாக நேற்று ஒரே நாளில் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து இருப்பதுடன், விழுப்புரம் தற்போது ‘ஹாட்ஸ்பாட்டாக’ மாறி வருகிறது.
விழுப்புரம்,
உலகையே தனது ஆதிக்கத்தால் நடுங்க வைத்து கொண்டிருக்கிறது ஆட்கொல்லியான கொரோனா வைரஸ், விழுப்புரம் மாவட்டத்தில் தினம் தினம் புதிய உச்சத்தை தொடுவது தொடர்கதையாக நீளுகிறது. மாவட்டத்தில் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரையில் அனைத்து பகுதியிலும் கொரோனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகமாகி வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,923 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 32 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ், ஆயுதப்படை போலீஸ்காரர், கண்டமங்கலம் போலீஸ் ஏட்டு, ஒலக்கூர், கிளியனூர் போலீஸ்காரர்கள் 2 பேர், மணம்பூண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வக பணியாளர், நறையூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர், அவலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், மேல்மலையனூர் அரசு மருத்துவமனை செவிலியர், பள்ளியம்பட்டு அரசு பள்ளி ஆசிரியர், திண்டிவனம் சார்பு நீதிமன்ற ஊழியர் மற்றும் பொதுமக்கள் அடங்குவர். இதன் மூலமாக மொத்த பாதிப்பானது, 3 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 164 பேருக்கு தான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இது 208 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 123 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாத கடைசியில் விழுப்புரம் நகரில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் மெல்ல, மெல்ல தொற்று பாதிப்பானது உயரத் தொடங்கியது.
ஆயிரம் பாதிப்பை கடந்த 3-ந்தேதியன்று தான் எட்டியது. அதாவது முதல் ஆயிரம் பாதிப்பை தொடுவதற்கு 3 மாத கால அவகாசத்தை கொரோனா எடுத்து கொண்டது. அதுவரைக்கும் கட்டுக்குள் இருந்த கொரோனா ஜூலையில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கி விட்டது. ஜூலை 17-ந்தேதி மொத்த பாதிப்பு 2 ஆயிரமாகவும், நேற்று 3 ஆயிரமாகவும் உயர்ந்துவிட்டது. தொடக்கத்தில் ஆயிரத்தை தொட 3 மாதங்களை எடுத்துக்கொண்ட கொரோனா, அதன் பின்னர் ஆயிரம் எண்ணிக்கையை தொடுவதற்கு 14 நாட்கள் என்ற நிலையில் தற்போது 9 நாட்களே தேவைப்பட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரத்தில் கொரோனா தனது கோர தாண்டவத்தை தொடங்க ஆரம்பித்துள்ளதற்கான எச்சரிக்கை மணியாகவே இது காட்டுகிறது.
எதற்கும் கட்டுப்படாமல் புது உச்சத்தை தொடுவதற்கு இந்த மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் வந்த தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதற்கு முந்தைய நாட்களில்(சனிக்கிழமைகளில்) மார்க்கெட், இறைச்சிகடைகள் என்று எங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் அரசு என்னதான் மெனக்கெடுத்தாலும் மக்கள் பேராபத்தை உணர்ந்து முழு ஒத்துழைப்புபை கொடுத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இல்லையேல் விழுப்புரம் மாவட்டமும் ஒரு ‘ஹாட்ஸ்பாட்டாக’ மாறிவிடும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Related Tags :
Next Story