ராமநகர் அருகே சென்னப்பட்டணாவில் இறந்தவரின் இறுதிச்சடங்கில் 500 பேர் பங்கேற்றதால் பரபரப்பு போலீஸ் விசாரணை


ராமநகர் அருகே சென்னப்பட்டணாவில் இறந்தவரின் இறுதிச்சடங்கில் 500 பேர் பங்கேற்றதால் பரபரப்பு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 28 July 2020 2:14 AM IST (Updated: 28 July 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில், இறந்தவரின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளிலும், இறுதி சடங்குகளிலும் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் மதியம் உயிர் இழந்திருந்தார்.

நேற்று முன்தினம் (ஞாயிறு) முழு ஊரடங்கு இருந்ததால், இரவோடு, இரவாக இறுதிச்சடங்கு நடத்தி உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். அதன்படி, நேற்று முன்தினம் இரவு அந்த நபரின் உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ வைரல்

அதாவது சென்னப்பட்டணாவில் இருந்து சாத்தனூர் சர்க்கிள் வரை அந்த நபரின் உடல் பெங்களூரு-மைசூரு ரோட்டில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில், கலந்துகொண்ட 500-க்கும் மேற்பட்டோரில் பலர் முக கவசம் அணியவில்லை. 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கும்பலமாக அனைவரும் சென்றனர். தற்போது இந்த இறுதிச்சடங்கு ஊர்வலம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதே நேரத்தில் ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருந்தாலும், அதுபற்றி போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, உஷாரான போலீசார் விதிமுறைகளை மீறி இறுதிச்சடங்கு நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னப்பட்டணாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story