ரூ.9 ஆயிரம் கோடியில் கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


ரூ.9 ஆயிரம் கோடியில் கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 28 July 2020 2:21 AM IST (Updated: 28 July 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

ரூ.9 ஆயிரம் கோடியில் கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா பதவி ஏற்று ஓராண்டு ஆவதையொட்டி சாதனை விளக்க கையேடு வெளியீட்டு விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு அந்த சாதனை கையேட்டை வெளியிட்டு பேசும்போது கூறியதாவது:-

நான் கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஒரு ஆண்டு ஆகிறது. நான் பதவி ஏற்றபோது மாநிலத்தில் வறட்சி இருந்தது. அதன் பிறகு சில நாட்களில் அதிகளவில் மழை பெய்து அணைகள் நிரம்பி வழிந்தன. குறிப்பாக வட கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. 1 லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன.

பிரதமர் மோடி பாராட்டினார்

அப்போது மந்திரிகள் நியமிக்கப்படவில்லை. நான் மட்டுமே பணியாற்றி வந்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். தேவையான உதவிகளை செய்து கொடுத்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்தேன்.

முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதை பிரதமர் மோடி பாராட்டினார். தற்போது கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது மட்டும் குறுக்கீடு செய்யாமல் இருந்திருந்தால், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் அதிகமாக செய்து இருப்போம். 2 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகள்

இனி வரும் காலத்தில் ஊரடங்கை பற்றி சிந்திக்காமல் வளர்ச்சி பணிகளில் முழு கவனம் செலுத்துவோம். மாநிலத்தின் எந்த பகுதியில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனாவை தடுக்கும் பணிகளுடன் வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பசியால் யாரும் வாடக்கூடாது என்பதற்காக தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.

கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாளில் இருந்து பழிவாங்கும் அரசியலில் ஈடுபடவில்லை. என்னை விமர்சிப்பவர்களையும் உரிய கவுரவத்துடன் அணுகுகிறேன். அனைவரின் ஒத்துழைப்புடன் கர்நாடகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். கர்நாடகத்தை நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக மாற்ற நான் சபதம் எடுத்துள்ளேன்.

கிராமப்புற சாலைகள்

அடுத்த 3 ஆண்டுகளில் அதிகளவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் யாருக்கும் வீடு இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது. அனைத்து சமுதாய மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றன. எனவே அரசின் நோக்கம் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ.9 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.4,700 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தலைநகர் பெங்களூருவை சர்வதேச தரத்திற்கு உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பெங்களூருவில் அனைதது அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு, நாட்டிலேயே முன்மாதிரி நகரமாக மாற்றப்படும். மாநில மக்களுக்கு நன்றிக்கடனை தீர்க்க வேண்டியுள்ளது. அதனால் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story