என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று எதிரொலி: நாராயணசாமிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை


என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று எதிரொலி: நாராயணசாமிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 28 July 2020 3:34 AM IST (Updated: 28 July 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே இல்லாதவகையில் திறந்தவெளியில் சட்டசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.

மருத்துவ பரிசோதனை

இந்தநிலையில் சபைக்காவலர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் சட்டசபை வளாகம் மூடப்பட்டது. இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக நேற்று அங்குள்ள கமிட்டி அறை மட்டும் திறக்கப்பட்டு அங்கு கொரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன், அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சந்திரபிரியங்கா, சாமிநாதன், சட்டசபை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 120 பேரிடம் இருந்து பரிசோதனைக்காக உமிழ்நீர் சேகரிக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை தெரியவரும். அடுத்தகட்டமாக நாளை (புதன்கிழமை) சட்டசபை வளாகத்தில் கொரோனா பரிசோதனை நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சட்டசபை ஊழியர், முதல்-அமைச்சரின் அலுவலக ஊழியர் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டபோது நாராயணசாமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை யடுத்து மீண்டும் நாராயண சாமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story