ஊரடங்கால் பாதிப்பு: சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் வழங்க வேண்டும் கலெக்டரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை


ஊரடங்கால் பாதிப்பு: சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் வழங்க வேண்டும் கலெக்டரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2020 4:40 AM IST (Updated: 28 July 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் வழிகாட்டுனர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை நம்பி, அவர்களை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று பிழைப்பு நடத்தி வந்த சுற்றுலா வழிகாட்டிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட சுற்றுலா வழிகாட்டுனர் சங்க நிர்வாகிகள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டியில் சுற்றுலா வழிகாட்டிகள் 50 பேர் கடந்த பல ஆண்டுகளாக சுற்றுலாவை நம்பி இருந்தோம். ஆனால் தற்போது கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதில்லை. இதனால் சுற்றுலா தொழிலையே நம்பி இருக்கும் எங்களது வாழ்வாதாரம் நலிவடைந்து கேள்விக்குறியாக உள்ளது.

வங்கி கடன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அறிவுறுத்தலின்படி வங்கி கடனுதவி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாங்கள் தக்க ஆவணங்களோடு வங்கிக் கடனுக்காக விண்ணப்பித்தோம். வங்கி ஊழியர்கள் எங்களை அலைகழித்துவிட்டு தற்போது வங்கி கடன் உங்களுக்கு தர இயலாது என்று கூறுகிறார்கள். ஆகவே எங்களுக்கு வங்கி கடன் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவர்களிடம் பணியில் இருந்த ஊழியர்கள் பெட்டியில் போட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது ஒருவர் கலெக்டரை சந்தித்து மனு அளிப்பதற்காக மேலே செல்ல முயன்றதால் ஊழியர்கள் அவரை தடுத்தனர். நோய் பரவலை தடுக்க அலுவலகத்துக்குள் செல்லக்கூடாது என்று மனுக்களை வாங்கி அனுப்பி வைத்தனர்.

Next Story