கொரோனா ஊரடங்கு காலத்தில் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு


கொரோனா ஊரடங்கு காலத்தில்   கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 July 2020 6:51 AM IST (Updated: 28 July 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காலத்தில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்தனர். அதில் 5 அமைப்புகள் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில், மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், இயற்கை வளங்களையும், சாலையோர மரங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பாரதீய இந்து பரிவார்

பாரதீய இந்து பரிவார் ஆலய வழிபாட்டு அணி சார்பில், இந்து மத பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும், இந்து மதத்தை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சினிப்பாண்டியன் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தமிழ்நாடு சீர்மரபினர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் சிலர், தங்களின் முகம் மற்றும் உடலில் விபூதி பூசிக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், பெண்களுக்கு அனைத்து நிறுவனங்களிலும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூய்மை காவலர்கள்

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், கைலாசப்பட்டியில் அரசு நிலத்தை 60 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தி வரும் விவசாயி குடும்பத்துக்கு பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் புரட்சி ரெட் தலைமை தாங்கினார்.

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த தூய்மை காவலர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள், ஊராட்சியில் தங்களை அவமரியாதையாக நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தங்களை காரணம் இன்றி வேலையில் இருந்து நிறுத்தியதை கைவிட்டு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story