காசநோய் பரிசோதனை மையத்தை சமுதாய கூடங்களுக்கு மாற்றக்கூடாது தமிழக அரசிடம் வலியுறுத்தல்


காசநோய் பரிசோதனை மையத்தை சமுதாய கூடங்களுக்கு மாற்றக்கூடாது   தமிழக அரசிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 July 2020 8:10 AM IST (Updated: 28 July 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் காசநோய் பிரிவு மையத்தை நகரில் உள்ள சமுதாய கூடங்களுக்கு மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு தவிர்க்கப்பட தமிழக அரசு உத்தவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனை நிர்வகிக்கும் துணை இயக்குனர் அலுவலகமும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் இருந்து காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சை மையத்துக்கு வந்து பலன் அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்துவதற்கான புதிய கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள காசநோய் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக அலுவலக கட்டிடங்களை அகற்ற சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நிர்வாக அலுவலகத்தையும், காசநோய் பரிசோதனை மையத்தினையும் அங்கிருந்து மாற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சமுதாய கூடம்

இதனைதொடர்ந்து காசநோய் பரிசோதனை மையம் மற்றும் நிர்வாக அலுவலகம் நகர் பகுதியில் உள்ள நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமுதாய கூடத்திற்கு மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமுதாய கூடங்கள் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதாகும். கட்டுமான பணி முடியும் வரை காசநோய் பிரிவு பரிசோதனை மையம் சமுதாய கூடத்தில் செயல்பட்டால் சமுதாய கூடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

விளக்கம்

இது பற்றி காசநோய் பிரிவு உயர் அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளதால் பரிசோதனை மையத்தையும், நிர்வாக அலுவலகத்தையும் மட்டுமே சமுதாய கூடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பிரிவு தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே செயல்படும்.

தற்போது நகராட்சி ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதால் தற்காலிகமாக சமுதாய கூடத்தில் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா பரிசோதனை முடிந்த பின்னர் நகராட்சி ஆஸ்பத்திரிகளுக்கு காசநோய் பரிசோதனை மையம் மாற்றப்படும். கொரோனா காலத்தை முன்னிட்டு கட்டுமான பணிகளை தாமதமாக தொடங்குவது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரத்து செய்ய வேண்டும்

எது எப்படி இருந்தாலும் காசநோய் சிகிச்சை பிரிவு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்படுவதை போல பரிசோதனை மையத்தையும் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தொடர்ந்து செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய கூடங்களில் மாற்றுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்ச உணர்வு உள்ள நிலையில் அதனை தவிர்க்க சுகாதாரத்துறை எடுத்து முடிவினை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும், காசநோய் நிர்வாக அலுவலகம் மட்டும் சமுதாய கூடத்தில் செயல்பட அனுமதிக்கலாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story