மாவட்டம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


மாவட்டம் முழுவதும்  ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2020 10:11 AM IST (Updated: 28 July 2020 10:11 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல், 

மராட்டிய மாநிலத்தில் உள்ள அம்பேத்கரின் வீடு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அந்த வீட்டை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது மருத்துவ துறையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்த மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் புது பஸ்நிலைய நுழைவுவாயில் முன்பு ஆதிதமிழர் பேரவையினர் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் கரிகாலன் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி தலைவர் அம்மாசி சதாசிவம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பரமத்தி-ராசிபுரம்

பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமத்தி ஒன்றிய செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிதி செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் தமிழரசு கண்டன உரையாற்றினார். இதில் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் பரமத்தி துணை நிதி செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

ராசிபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் அதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுமன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்ப மாநில துணை செயலாளர் பிரபாகரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா முகமது, ராசிபுரம் நகர விடுதலை கழகம் செயலாளர் பிடல் சேகுவேரா ஆகியோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story