காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 July 2020 10:37 AM IST (Updated: 28 July 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்தது.

பென்னாகரம்,

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. மேலும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வரத்து துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

நுழைவுவாயில் பூட்டி ‘சீல்’ வைப்பு

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Next Story