பள்ளி தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஆசிரியர், மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
பள்ளி தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஆசிரியர், மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
வலங்கைமான்,
வலங்கைமானில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வலங்கைமான் வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் நிர்மல் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பாலசுந்தரம், ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஈவேரா, மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் மதிவாணன், மாவட்ட துணைச்செயலாளர் தயாசவுந்தர் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
கொரோனா பரிசோதனை
ஊரக பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நேரடியாக கருத்து கேட்டு அதன்பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும். அவ்வாறு பள்ளிகளை திறப்பதற்கு முன்பு பள்ளியில் கிருமிநாசினி உள்ளிட்ட சுகாதார வசதிகளை உறுதி படுத்தி வேண்டும். பள்ளி தொடங்குவதற்கு முன் அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும். ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட துணைச்செயலாளர் டேவிட்ஞானராஜ், முன்னாள் வட்டார செயலாளர் பாலமுருகன், வட்டார துணை பொறுப்பாளர்கள் ராஜேஷ், ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார செயலாளர் சரவணகுமார் வரவேற்றார். முடிவில் வட்டார பொருளாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story