துவரங்குறிச்சி அருகே பயணிகள் நிழற்குடையில் கிடந்த குழந்தை தாய் யார்? போலீசார் விசாரணை


துவரங்குறிச்சி அருகே பயணிகள் நிழற்குடையில் கிடந்த குழந்தை   தாய் யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 July 2020 11:46 AM IST (Updated: 28 July 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அருகே பயணிகள் நிழற்குடையில் 3 மாத பெண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தையின் தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துவரங்குறிச்சி, 

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த சேத்துப்பட்டியில், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் நேற்று காலை ஒரு கூடை இருந்தது. அதில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்கவே, அருகில் உள்ளவர்கள் சென்று அந்த கூடையை திறந்து பார்த்தபோது அதில் பச்சிளம் பெண் குழந்தை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு அழகான உடை அணிவிக்கப்பட்டு அதன் அருகே பால் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர், இதுகுறித்து திருச்சி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாய் யார்?

தகவலின்பேரில் போலீஸ் நிலையம் வந்த சைல்டு லைன் அமைப்பினர், அந்த குழந்தையை பெற்று துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அந்த குழந்தை பிறந்து 3 மாதமே இருக்கும் என்றும், அந்த குழந்தையின் காலில் சிறிய அளவில் ஊனம் இருந்ததும் தெரியவந்தது. பின்னர், அந்த குழந்தை திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையின் தாய் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், இதே துவரங்குறிச்சி பகுதியில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெண் குழந்தைகள் அனாதையாக வீசப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story