முடிவுகள் வெளியிடுவதில் முறைகேடு: திருச்சியில் தனியார் கொரோனா பரிசோதனை மையத்திற்கு ‘சீல்’ ரூ.5 லட்சம் அபராதமும் விதிப்பு


முடிவுகள் வெளியிடுவதில் முறைகேடு:   திருச்சியில் தனியார் கொரோனா பரிசோதனை மையத்திற்கு ‘சீல்’   ரூ.5 லட்சம் அபராதமும் விதிப்பு
x
தினத்தந்தி 28 July 2020 11:54 AM IST (Updated: 28 July 2020 11:54 AM IST)
t-max-icont-min-icon

பரிசோதனை முடிவுகளில் முறைகேடு செய்த திருச்சி தனியார் கொரோனா பரிசோதனை மையத்திற்கு கலெக்டர் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருச்சி, 

திருச்சி புத்தூர் அருணா தியேட்டர் அருகே, டாக்டர்ஸ் டயக்னஸ் சென்டர் என்ற பெயரில் ஒரு தனியார் பரிசோதனை மையம் இயங்கி வந்தது. இங்கு ரத்தம், சிறுநீரக பரிசோதனை, நுரையீரல் செயல்திறன், மரபணு பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, இருதய பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மையமாகவும் செயல்பட்டு வந்தது.

இந்த மையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என வந்தவர்களுக்கு கூட தொற்று உறுதி என சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தேவை இல்லாமல் காலதாமதம் செய்ததாகவும் ஏராளமான புகார்கள் எழுந்தன.

‘சீல்’ வைப்பு

இதனைத்தொடர்ந்து இந்த மையத்தில் கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தடைவிதித்தார். மேலும் முழுஅளவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, நேற்று இந்த பரிசோதனை மையத்திற்கு ‘சீல்’ வைத்தனர். நோய் பரவல் மற்றும் வீண் அச்சத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்த மையத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் செயல்பட்டு வந்த இந்த கட்டிடத்தில் விதிமுறை மீறல்கள் இருந்ததால் மாநகராட்சி நகரமைப்பு செயற்பொறியாளர் சிவபாதம், அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். கட்டிடத்தின் முன்பகுதி முழுவதும் தகரத்தால் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. பரிசோதனை மையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story