மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரியலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டம் 2020, மாநில அரசு அறிவித்துள்ள குதிரைத்திறனுக்கேற்ற கூடுதல் மின்கட்டண வைப்புத்தொகை, இலவச மின்சாரம் ரத்து, வேளாண் விளைபொருட்களின் வணிக ஊக்குவிப்பு உறுதி அவசர சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வாபஸ் பெறவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 17-ந் தேதி நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் கையெழுத்து இயக்கம், வீடுகளில் கருப்பு ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தல் என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி கையெழுத்து இயக்கம், வீடுகளில் கருப்பு ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தல் என்ற 2-வது கட்ட போராட்டங்களில் கடந்த 20-ந் தேதி ஒருகோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனையொட்டி நேற்று அரியலூர் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகளின் கருப்பு கொடி போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஆர்ப்பாட்டம்
மேலும் அரியலூர் பஸ் நிலையம் முன்பு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில், விவசாய சங்க பொறுப்பாளர்கள் ஒன்று கூடி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை பறிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரும் சட்டங்களை கண்டித்து இன்று (அதாவது நேற்று) அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சிமெண்டு ஆலைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில், 15 குதிரைத்திறன் கொண்டு மின்மோட்டார்களை இயக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால் மத்திய, மாநில அரசுகளின் மின்திருத்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றார்.
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராசன் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பெரம்பலூரில்...
இதேபோல் பெரம்பலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் தமிழக விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., பகுஜன் சமாஜ்கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் விவசாயசங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி துங்கபுரம், கோவில்பாளையம், காடூர், லாடபுரம், நக்கசேலம், நாரணமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஆர்ப்பாட்டமும், தெரணி, அயிலூர் குடிகாடு, கல்பாடி, எறையூர், ஆண்டிகுரும்பலூர், முருக்கன்குடி, பொன்னகரம், அகரம் சிகூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story