நண்பன் பட பாணியில் வீடியோ காலில் டாக்டரின் அறிவுரையை பெற்று பெண்ணுக்கு பிரசவம்


நண்பன் பட பாணியில் வீடியோ காலில் டாக்டரின் அறிவுரையை பெற்று பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 29 July 2020 2:00 AM IST (Updated: 29 July 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால், நண்பன் பட பாணியில் வீடியோ காலில் டாக்டரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு உறவினர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் ஹாவேரியில் நடந்தது. பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஹாவேரி,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் 5 வாரம் ஞாயிறு முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இதில் 4 வார ஞாயிறு முழு ஊரடங்கு நிறைவு பெற்று உள்ளது. இந்த நிலையில் ஞாயிறு ஊரடங்கின் போது ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் வீடியோ காலில் டாக்டரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

ஹாவேரி மாவட்டம் ஹனகல் டவுன் பகுதியை சேர்ந்தவர் வாசவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். இதுபற்றி அறிந்த வாசவியின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் வாசவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அவரது கணவர் வாகனத்தை தேடி சென்றார். ஆனால் ஞாயிறு ஊரடங்கை காரணம் காட்டி, வாகனத்தை கொண்டு வர டிரைவர்கள் மறுத்து விட்டனர். இதனால் வாசவியின் கணவர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

வீடியோ காலில்....

இந்த சந்தர்ப்பத்தில் வாசவியின் உறவுக்கார பெண் ஒருவர் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவரான பிரியங்கா மண்டகியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வாசவிக்கு பிரசவ வலி வந்ததும் பற்றியும், ஊரடங்கால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாதது பற்றி விளக்கி கூறினார்.

இதையடுத்து தனக்கு வீடியோ கால் செய்யும்படி டாக்டர் பிரியங்கா கூறினார். இதனால் அந்த பெண்ணும் டாக்டர் பிரியங்காவுக்கு வீடியோ கால் செய்தார். அப்போது பிரியங்கா வீடியோ கால் மூலம் சில அறிவுரைகளை கூறினார். அதன்படி வாசவிக்கு உறவுக்கார பெண்களான மதுலிகா தேசாய், அங்கிதா, ஜோதி, விஜயலட்சுமி, மாதுரி, முக்தா, சிவலீலா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில் வாசவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் வாசவியும், அவரது உறவுக்கார பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் டாக்டர் பிரியங்காவிடம் காண்பித்தனர். அவரும் வீடியோ காலில் அந்த குழந்தையை கொஞ்சினார். இதை தொடர்ந்து டாக்டருக்கு, வாசவியும், அவரது உறவினர்களும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

நண்பன் பட பாணியில்...

இதையடுத்து நேற்று முன்தினம் காலை வாசவியும், அவரது குழந்தையும் ஹனகல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். தமிழில் நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில், பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டராக நடித்து இருக்கும் நடிகை இலியானா வீடியோ கால் மூலம் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார்.

அதுபோல விஜயும், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து இருப்பார். தற்போது அதே பாணியில் வாசவிக்கும் குழந்தை பிறந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story