கொரோனா பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் மூடல் ஆன்லைனில் கல்வி கற்க வசதியாக மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி


கொரோனா பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் மூடல் ஆன்லைனில் கல்வி கற்க வசதியாக மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி
x
தினத்தந்தி 28 July 2020 8:40 PM GMT (Updated: 28 July 2020 8:40 PM GMT)

கொரோனா பாதிப்பால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைனில் மாணவ- மாணவிகள் பாடம் கற்க வசதியாக ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, கையடக்க கணினி வழங்குவது என பெங்களூரு மாநராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெங்களூரு,

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது. இந்த கொரோனா வைரசால் ஏராளமான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பில் கடைசி இடத்தில் இருந்த இந்தியா, படிப்படியாக முன்னேறி தற்போது உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆன்லைன் கல்வி

இந்த கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கும் முறை அதிகரித்து வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக கல்வியை கற்பிக்க ஊக்கப்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தங்களது மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகிறது.

இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஏழை, நடுத்தர பிரிவை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஆன்லைன் கல்விக்கான மடிக்கணினி, ‘ஸ்மார்ட் போன்’ இல்லாமல் ஆன்லைன் பாடம் கற்பிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் ஏழை மாணவர்கள் கல்வி கற்க வசதியாக இலவச கையடக்க கணினி மற்றும் மடிக்கணினி வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இலவசகையடக்க கணினி

பெங்களூரு மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் கவுதம்குமார் தலைமையில் நேற்று பெங்களூரு மாநகராட்சி மன்ற அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம் வருமாறு:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெங்களூருவில் கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடங்கவில்லை. ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதற்கு ஐகோர்ட்டும் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் கல்வி கற்க மடிக்கணினி அவசியம் தேவைப்படுகிறது. அதனால் ஆன்லைனில் கல்வி கற்க வசதியாக 5 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவச கையடக்க கணினி (டேப்லெட்) மற்றும் 10-ம் வகுப்பு மேல் அதாவது பி.யூ.கல்லூரி, டிகிரி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுளளது. அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தங்களின் சிறப்பு நிதி மற்றும் நலத்திட்ட நிதியில் இருந்து, ஏழை குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு இந்த கணினி சாதனங்களை வழங்கலாம்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த

முடியும்

இந்த கூட்டத்தில் கமிஷனர் மஞ்சுநாத் பேசும்போது கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி 2 ஆயிரம் என்ற அளவில் பாதிப்பு உள்ளது. கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். அதனால் அடுத்து வரும் நாட்களில் தினசரி பாதிப்பு 4 ஆயிரமாக கூட அதிகரிக்கலாம். ஆனால் யாரும் பயப்பட தேவை இல்லை. பரிசோதனைகளை அதிகரிக்கும்போது, அதன் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அனைத்து மண்டலங்களிலும் பொதுமக்களுக்கு பரிசோதனையை இலவசமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவ மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆரம்ப நிலையிலேயே தொற்று இருப்பதை கண்டறிந்துவிட்டால், அதில் இருந்து எளிதாக குணம் அடையலாம்.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் பேசினார்.

Next Story