ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தீவிரம்: வாலாங்குளத்தில் பார்வையாளர் மாடம் அமைப்பு


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தீவிரம்: வாலாங்குளத்தில் பார்வையாளர் மாடம் அமைப்பு
x
தினத்தந்தி 29 July 2020 4:22 AM IST (Updated: 29 July 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன் அங்கு பார்வையாளர் மாடமும் அமைக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாங்குளம், குறிச்சிகுளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன்குளம், கிருஷ்ணாம்பதி குளம் உள்ளிட்ட குளங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இங்கு மிதக்கும் நடைபாதை, உணவகங்கள், சைக்கிள் பயணத்திற்கு தனிப்பாதை, குளத்தின் அழகை காண பார்வையாளர் மாடம், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதில் உக்கடம் குளக்கரையில் 150 மீட்டர் தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் இங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

வாலாங்குளம்

இதேபோல் கோவை வாலங்குளத்திலும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது குளக்கரையில் அமர்ந்து குளத்தின் அழகை கண்டு ரசிக்கவும், அங்கு வரும் பறவைகளை கண்டு மகிழும் வகையில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு பொதுமக்கள் செல்பியும் எடுத்து மகிழலாம்.இதுதவிர சுங்கம்-உக்கடம் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குளத்தின் கரையும், அதன் எதிர்புறம் உள்ள கரையும் இணைக்கும் வகையில் மிதக்கும் நடைபாதை பாலம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குளத்தின் கரைப்பகுதியில் குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பணிகள் தீவிரம்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வாலாங்குளம் ரூ.43 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குளக்கரையில் மேம்பாட்டு பணிகள் முடிந்து விட்டது.

மீதம் உள்ள பகுதிகளில் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து விடும்.

இதபோல் உக்கடம் குளக்கரை ரூ.40 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. 150 மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.

Next Story