பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஆடுகள், கோழிகள் விற்பனை மும்முரம்


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஆடுகள், கோழிகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 29 July 2020 4:36 AM IST (Updated: 29 July 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று மேலப்பாளையத்தில் ஆடுகள், கோழிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

நெல்லை,

முஸ்லிம்களின் முக்கிய நிகழ்ச்சியான பக்ரீத் பண்டிகை வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முஸ்லிம் மக்கள், மற்றவர்களுக்கு இறைச்சியை பகிர்ந்து அளிப்பார்கள்.

இதற்காக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை வெட்டப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்றாலும் அவரவர் வசிக்கும் பகுதியில் எளிய முறையில் பக்ரீத் பண்டிகை நடைபெறுகிறது. இதற்காக பலரும் ஏற்கனவே ஆடுகளை வாங்கி வளர்த்து வருகிறார்கள்.

மேலப்பாளையம் சந்தை

நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை கொரோனா ஊரடங்கால் மூடிக்கிடக்கிறது. இந்த சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செயல்பட்டு வந்தது. கொரோனாவால் திறக்க அனுமதி கிடைக்காவிட்டாலும், பக்ரீத் பண்டிகைக்கு பொது மக்களுக்கு தேவையான ஆடுகளை விற்பனை செய்வதற்காக நேற்று வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களது ஆடுகளை மேலப்பாளையம் சந்தை முக்கில் இருந்து டக்கரம்மாள்புரம் செல்லும் ரோடு பகுதிக்கு கொண்டு வந்தனர்.

அதாவது சந்தை முன்பு உள்ள மெயின் ரோட்டில் வரிசையாக ஆடுகளை நிறுத்தி வைத்திருந்தனர். ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது. பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான ஆடுகளை தேர்வு செய்து பணத்தை கொடுத்து வாங்கிச்சென்றனர். ஆடுகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் வழக்கத்தைவிட விலை அதிகமாகவே இருந்தது. இதே போல் கோழிகளும் அதிகளவு விற்பனை ஆனது.

Next Story