தென்காசியில் குளத்தில் குதித்து மாணவர் தற்கொலை பெற்றோர் திட்டியதால் விபரீத முடிவு


தென்காசியில் குளத்தில் குதித்து மாணவர் தற்கொலை பெற்றோர் திட்டியதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 29 July 2020 5:13 AM IST (Updated: 29 July 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவர் ஒருவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி,

தென்காசி ரெயில்வே பீடர் ரோடு நடு பல்க் அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சந்தூர் பிரகாஷ் (வயது 15). இவர் ஒரு தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வில் இவர் கணிதத்தில் தோல்வியடைந்திருந்தார்.

மறுதேர்வு எழுத இருந்த சூழ்நிலையில் இவரது பெற்றோர் இவரை திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து தென்காசி போலீசில் நேற்று காலையில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பிணமாக மிதந்தார்

இந்த நிலையில் நேற்று மதியம் தென்காசி தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஒரு குளத்தில் சந்தூர் பிரகாஷின் உடல் பிணமாக மிதந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் சம்பவ இடத்துக்கு சென்றார். உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story