கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்


கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி  டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 29 July 2020 5:14 AM IST (Updated: 29 July 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

கொரோனா தொற்றால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பலியான பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பணியாளர் குடும்பத்தின் மருத்துவ செலவை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் 28-ந்தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 3-ந்தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து மாநிலந்தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

அந்த வகையில் கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு, டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று காலை கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயல் தலைவர் கோபால்சாமி, மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் வட்ட தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், வடலூர், பரங்கிப்பேட்டை மற்றும் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story