திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி - குஜராத்தை சேர்ந்த டிரைவர் கைது


திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பெண்கள் பலி - குஜராத்தை சேர்ந்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 July 2020 1:02 AM GMT (Updated: 29 July 2020 1:02 AM GMT)

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் மீது டாரஸ் லாரி மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக குஜராத்தை சேர்ந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள சின்ன கோட்டாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவருடைய மனைவி மனவர்த்தாள் (வயது 50). இவர்களது மகன் சசிகுமார் (29). இவர், திருவண்ணாமலையில் உள்ள சித்தா மெடிக்கல் கடையில் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை மனவர்த்தாள் மற்றும் அவருடன் கூலி வேலை செய்யும் பெரிய கோட்டாங்கல் கிராமத்தை சேர்ந்த சத்தியா (35) ஆகியோரை வேலைக்கு அழைத்து கொண்டு சசிகுமார் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை அருகில் செல்லும் போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது லாரியின் பின்பக்க டயரில் சிக்கி மனவர்த்தாளும், சத்தியாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சசிகுமார் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

லாரி டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மனவர்த்தாள், சத்தியா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், குஜராத் மாநிலம் வடத்தோரா பகுதியை சேர்ந்த ராஜாராம் (42) என்பதும், குஜராத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி டாரஸ் லாரியை ஒட்டிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் ராஜாராமை போலீசார் கைது செய்தனர்.=

Next Story