கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு வறுமையால் குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பி வைத்த பெற்றோர் நிவாரண உதவி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை


கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு   வறுமையால் குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பி வைத்த பெற்றோர்   நிவாரண உதவி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 July 2020 7:20 AM IST (Updated: 29 July 2020 7:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர்கள் வறுமையால் தங்களது குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஈரோடு, 

ஈரோடு ரெயில்வே காலனி பகுதியில் 4 சிறுமிகள் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் ஈரோடு ரெயில்வே சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அந்த அமைப்பை சார்ந்த ரீடு தொண்டு நிறுவனத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமிகளிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமிகள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெற்றோர் ஈரோடு சோலார் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அதன்பின்னர் சைல்டுலைன் அமைப்பினர் அங்கு சென்றும் விசாரித்தனர்.

அங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் வசித்து வருவதும், அவர்கள் வேலையின்றி இருந்து வந்ததால் தங்களது குழந்தைகளையே பிச்சை எடுக்க அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நிவாரணம்

அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சோலார் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள்? அதில் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது? போன்ற விவரங்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும், உரிய நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயராஜ் கூறியதாவது:-

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்பு தேடி ஈரோடு வந்து உள்ளார்கள். அவர்கள் கோவைக்கு சென்று கைக்கடிகாரம் போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, பல்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் வருமானமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீண்டும் சொந்த மாநிலத்துக்கு செல்ல தயாராக இல்லை.

வறுமை

வறுமையில் இருந்து மீள்வதற்காக குழந்தைகளை அவர்கள் பிச்சை எடுக்க அனுப்பி வைத்து இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தேவையான அரிசி போன்ற பொருட்களை வழங்க அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள். மேலும், 18 வயதுக்கு உள்பட்டவர்கள் சுமார் 30 பேர் அங்கு உள்ளனர். அவர்களில் பலருக்கு ஆதார் அட்டை கூட கிடையாது. எனவே அவர்களுக்கு தேவையான உதவியை செய்ய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து உள்ளோம். மேலும் சுய தொழில் கற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story